ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன அதிபர் வீரமணி 12 சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய புகார் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், வழக்கில் ஆதாரங்கள் இல்லை என, விசாரணை முடித்து வைக்கப்பட்டது.
தற்போது, இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிக்கிய நிலையில், ஜெம் வீரமணி வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, காவல் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து, ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
ஐஜி தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவில் காவல் இணை ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே ஜெம் வீரமணி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகள் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முறையீட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருவதால், போலீசார் விசாரணையை தொடரட்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
















