முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உதவியாளர் கவிபிரசாத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திமுக ஆட்சியின்போது நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஆயிரத்து 20 கோடி ரூபாய்க்கு சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்ததாக தமிழக அரசு, டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. தவெக ஆட்சிக்கு வந்த பின், நகராட்சித்துறை ஊழல் குறித்து விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், நேருவின் வலது கரமான கவிபிரசாத் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், கவிபிரசாத் தொடர்பான வாட்ஸ்அப் தகவல்கள் உள்ளிட்டவை விசாரணையில் ஆதாரங்களாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், லண்டன் செல்ல சென்னை விமான நிலையம் வந்த கவிபிரசாத்தை, குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கவிபிரசாத்தை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
















