மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்துடன் டயாலிசிஸ் உதவி இல்லாமல் ஒரு நோயாளி 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்துள்ளார். மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் இதுவே இதுவரை இல்லாத நீண்ட காலம் உயிர் வாழ்ந்த சம்பவமாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவில், சுமார் 100,000 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பதாகவும் ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 25,000 மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுவதாகவும் தரவுகள் காட்டுகின்றன.
இங்கிலாந்தில் சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர் என்றும், இந்தக் காத்திருப்புப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க ஏழு ஆண்டுகள் ஆகலாம் என்றும், ஆனால் டயாலிசிஸ் சிகிச்சையில் மக்கள் சராசரியாக ஒரு நோயாளி ஐந்து ஆண்டுகள் மட்டுமே வாழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான உறுப்புகளின் பற்றாக்குறை காரணமாக, மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் வேற்றுயிரின மாற்று அறுவை சிகிச்சை அதாவது பிற உயிரினங்களின் உறுப்புகளைப் பயன்படுத்துவது குறித்து நீண்ட காலமாகவே ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தைச் சேர்ந்த 66 வயதான டிம் ஆண்ட்ரூஸ் தீவிர சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இரண்டாம் வகை நீரிழிவு நோயின் விளைவாக இறுதிக்கட்ட சிறுநீரக நோய் இருந்ததால் அவரது சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கியிருந்தன.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி அவருக்கு அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் ஜெனரல் மருத்துவமனை மருத்துவர்கள் அயல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
மனிதர்களின் உடல் உறுப்புகளைப் போன்ற பன்றியின் சிறுநீரகம் மனித உடலால் உடனடியாக நிராகரிக்கப்படும் என்பதால், பன்றியின் மரபணுக்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு மனித உடலுக்குப் பொருந்தும் வகையில் அது மாற்றியமைக்கப்பட்டது.
டிம் ஆண்ட்ரூஸ் உடலில் பொருத்தப் பட்ட பன்றியின் சிறுநீரகம் உடனடியாகச் செயல்படத் தொடங்கியது. இதனால் 271 நாட்களுக்கு டயாலிசிஸ் செய்யாமல் இயல்பான வாழ்க்கையை டிம் ஆண்ட்ரூஸால் வாழ முடிந்தது.
சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு, பன்றியின் சிறுநீரக இரத்த நாளங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக அது அகற்றப்பட்டது. கடந்த ஜனவரியில் ஒரு கொடையாளரிடமிருந்து மாற்று உறுப்பு கிடைக்கும் வரை, டிம்முக்கு 82 நாட்களுக்கு டயாலிசிஸ் தேவைப்பட்டது. அந்த உறுப்பு நன்றாகச் செயல்பட்டு வருகிறது.
பன்றியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை ஒரு “அதிசயம்” என்றும், சமைக்கவும், தூசியைத் துடைக்கவும், தனது நாய் கப்கேக்குடன் நீண்ட தூரம் நடைப்பயணம் செல்லவும் முடிந்தது என்றும் ஆண்ட்ரூஸ் ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.
உயிருள்ள கொடையாளர் இல்லாத நோயாளிகளுக்கு, டயாலிசிஸைத் தவிர்த்து அவர்களை மாற்று அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல, வேற்று இன உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்று மாஸ் ஜெனரல் பிரிகாம் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் லியோனார்டோ ரியெல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுநீரகம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும், கிடைக்கக்கூடிய உறுப்புகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள இந்த இடைவெளிதான், வேற்று இன உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மிகவும் முக்கியமானதாக மாற்றுகிறது என்று கூறியுள்ளார்.
முன்னதாக 2024-ல் முதல் பன்றி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்ட ஒரு நோயாளி இதயப் பிரச்சனைகளால் 52 நாட்களில் உயிரிழந்துள்ளார்.
உயிருள்ள மனிதருக்குப் பன்றியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, டயாலிசிஸ் இல்லாமல் மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்தது இதுவே முதல்முறையாகும். மேலும், மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாறிய உலகின் முதல் நிகழ்வும் இது என்பது குறிப்பிடத் தக்கது.
இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சையே சிறந்த சிகிச்சை முறையாகும். ஆனால் சரியான நேரத்தில் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான மனித உறுப்புகள் போதுமான அளவில் கிடைப்பது இல்லை.
இந்த இடைவெளியை நிரப்ப வேற்றுயிரின மாற்று அறுவை சிகிச்சை உதவக்கூடும் என்பதே இந்த சாதனையின் முக்கிய நோக்கமாகும்.
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கிடைக்கும் வரை, பன்றியின் உறுப்புகளை ஒரு இடைக்கால ஏற்பாடாக பயன்படுத்தலாம் என்ற இந்த மருத்துவச் சாதனை நீண்ட கால டயாலிசிஸ் காத்திருப்புப் பட்டியல்களைக் குறைப்பதற்கான திறவுகோலாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன் நீண்டகாலப் பாதுகாப்பு மற்றும் நீடித்த தன்மை உறுதிசெய்யும்போது, இது ஒரு முழுமையான இறுதிநிலை சிகிச்சையாகவும் மாறும் வாய்ப்புள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
















