ஜெம் வீரமணி மீதான வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடியோ வெளியானது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த துளிர் அறக்கட்டளை தரப்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வீடியோக்கள் வெளியான சமூக வலைதளப் பக்கங்களை முடக்கக் கோரி கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வீடியோக்கள் வெளியானது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை தெரியாமல், ஊடகங்கள் செயல்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட யாரும் புகாரளிக்க முன்வரமாட்டார்கள் என நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக விவாதங்கள் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
மேலும் வழக்கின் முன்னேற்றம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக வாரம் ஒருமுறை பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய மாநில அரசுகள், காவல்துறை மற்றும் வீடியோவை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
















