‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் இன்று மதுரை வரவுள்ள நிலையில், விமான நிலையம் முதல் நிகழ்விடம் வரையிலான வழித்தடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்வர் விஜய் முதல்முறையாக மதுரை வர உள்ளதால், அவருக்கு வரவேற்பு அளிக்க தொண்டர்களும் பொதுமக்களும் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் மதுரை விமான நிலையச் சாலையின் இருபுறமும் மரக்கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையம் முதல் நிகழ்விடம் வரையிலான வழித்தடம் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல்வரின் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
















