மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ரெஜிநகர் தொகுதியிலும், நந்திகிராம் தொகுதியிலும் பாஜகவின் வெற்றி பிரகாசமாகியுள்ளது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட ரெஜிநகரில், ஆளும் பாஜக எதிர்பாராத வெற்றிகளை குவித்து வருகிறது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்கரவ் சர்க்கார், ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் (AJUP) குலாம் நபி ஆசாத்தை விட 34 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
ஏஜேயுபி தலைவர் ஹுமாயூன் கபீரின் மகனான ஆசாத், காங்கிரஸ் வேட்பாளர் அப்துல்லாஹில் காபி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ரபியுல் ஆலம் சௌத்ரி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இதேபோன்று, மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்று ராஜினாமா செய்த நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹசிராணி ரத் 49 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பாஜக வேட்பாளரின் வெற்றி பிரகாசமாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, சிறுபான்மை சமூகம் பாஜகவை விரும்புவதாக கூறியுள்ளார்.
அசாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளர் தேவஷிஷ் சர்மா 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் முகமது பத்ருதின் அஜ்மல், காங்கிரஸ் வேட்பாளர் சிபாமோனி போரா ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதன் மூலம் நாகோன் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
















