திமுக இளைஞரணி மாநாட்டுக்காக ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் எடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகனுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுத் திடலைச் சமன்படுத்த, மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் எடுத்ததாகப் புகார் எழுந்தது.
இதனால் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது, இருவருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என வாய்மொழியாக அறிவுறுத்திய நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
















