கேரளாவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சக்கக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தும் பணி தோல்வியில் முடிந்தது.
இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் சக்கக்கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து செயற்கைக்கோள் தொடர்புடைய ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டனர்.
இதற்காக சுமார் 140 வனத்துறையினர் அடங்கிய குழுவினர் தேடுதல் மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைக்கு முதல் மயக்க ஊசி செலுத்தப்பட்ட போதிலும், வனத்துறையினர் எதிர்பார்த்தபடி யானை முழுமையாக மயக்கமடையவில்லை.
செம்பரத்துக்குழி பழங்குடியினர் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் யானை இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அப்பகுதியில் நிலவும் பனிமூட்டம் மற்றும் போதிய வெளிச்சமின்மையால் மயக்க ஊசி செலுத்துவதற்கான இலக்கை கணிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே யானை திறந்தவெளி பகுதிக்கு வரும் வரை காத்திருந்து அதன் பின்னர் மயக்க ஊசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
















