திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பெயர் வெளியிட விரும்பாத தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 160 கோடி ரூபாய் மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்க உள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தங்க நகை காணிக்கை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக 9 செட்களாக, 43 வகையான தங்க ஆபரணங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
கிரீடம், தங்கப் பாதுகைகள், பல அடுக்குகளைக் கொண்ட தங்க மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் குறித்த விவரங்களை ஐந்து மாதங்களுக்கு முன்பே தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதன்படி நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே தனிநபர் ஒருவர் வழங்கும் மிகப்பெரிய காணிக்கை இதுவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்றுக்கொள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
















