திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் கோவை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், சொத்துவரி, திடக்கழிவு மேலாண்மை, எல்இடி விளக்கு கொள்முதல், பராமரிப்பு பணி உள்ளிட்ட பிரிவுகளில் நிதி இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியில் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 53 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும். திடக்கழிவு மேலாண்மையில் 150 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக காலியிட வரி வசூல் செய்யாததில் 136 கோடியும், சொத்து வரியை யு.டி.ஐ.எஸ் சர்வரில் முறைப்படுத்தாத காரணத்தால் ஆயிரத்து 194 கோடி ரூபாய் வரையும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிதி இழப்புக்கு மாநகராட்சி ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளே பொறுப்பு எனவும், ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து இதற்கான தொகையை வசூலித்து ஈடு செய்ய வேண்டும் எனவும் தணிக்கை துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















