ஆயிரத்து 20 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஒப்பந்தங்கள் வழங்கியதிலும், அரசு பணி நியமனங்களிலும் முறைகேடு நடைபெற்றதாக தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது.
ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்த மதிப்பில் 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் ஆயிரத்து 20 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி கே.என். நேரு, அவரது சகோதரர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















