கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த புகார் தொடர்பாக உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும், சுமார் 116 நாட்களாக வழக்குப்பதிவு செய்யாமல் மறைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு விவரம் தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாநில காவல்துறையால் சுதந்திரமாக விசாரிக்க முடியாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
வழக்கின் முக்கிய மின்னணு ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கனிமொழி சோமு, செல்போன் உள்ளிட்ட ஆதாரங்களைப் பாதுகாக்கவும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்தவும் கோரியுள்ள இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















