தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகளுக்காக, 85 வயதாகும் நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.
தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளை, 1890-களில் கரும்பு வெட்டும் கூலியாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றவர்களின் வழித்தோன்றல் ஆவார்.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி நவநீதம் பிள்ளை பிறந்தார்.
இன ரீதியான பாகுபாட்டை எதிர்கொண்டு வழக்கறிஞராகவும், தென் ஆப்பிரிக்காவின் சட்ட முன்னோடியாகவும் ஆனார்.
இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா, 1973ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட உதவியை நவநீதம் பிள்ளை செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில், வெள்ளை இனத்தவர் அல்லாத முதல் பெண் நீதிபதியாக நவநீதம் பிள்ளை பணியாற்றியுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் பணியாற்றிய நவநீதம் பிள்ளை,
2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராக பதவி வகித்துள்ளார்.
2021 முதல் 2025 வரை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
இலங்கை தமிழர்கள் பிரச்னைகளுக்காகவும் நவநீதம் பிள்ளை குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















