அமெரிக்க இடைத்தேர்தல்களில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த தேர்தலில், களம் கண்டுள்ள இந்திய அமெரிக்கர்களின் வெற்றி, தோல்விகளைப் பற்றி இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
அமெரிக்காவின் ஓஹியோ மாநில ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான விவேக் ராமசாமி தோல்வியடைந்துள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஓஹியோவில் ஜனநாயகக் கட்சி ஆளுநர் பதவியைக் கைப்பற்றியுள்ளது. ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டன் (Amy Acton) வெற்றி பெற்று, ஓஹியோ மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவியேற்க உள்ளார்.
அதிபர் ட்ரம்பின் ஆதரவு பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 41 வயதான விவேக் ராமசாமி கடந்த மே மாதம் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த போதிலும் இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர், ஏமி ஆக்டனிடம் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்த்து களமிறங்கிய ஏமி ஆக்டனின் குடும்பம் தொடர்பான சர்ச்சைக்குரிய விளம்பரம் வெளியிடப்பட்டதே வாக்காளர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
வெர்ஜீனியா மாகாணத்தின் 10-வது காங்கிரஸ் தொகுதியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதான சுஹாஸ் சுப்ரமணியம் (Suhas Subramanyam) அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
61.5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற சுஹாஸ் சுப்ரமணியத்தை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் டேவ் பெக்வித் 36.4 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளார்.
இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த சுப்ரமண்யம் ஹூஸ்டனில் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார்.
நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற பிறகு, முன்னாள் அதிபர் ஒபாமா அரசில் வெள்ளை மாளிகையின் தொழில்நுட்பக் கொள்கை ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான 39 வயதான பியா தண்டியா, புளோரிடாவின் 22-வது நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் 51.9 சதவீத வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புளோரிடாவின் 22-வது நாடாளுமன்றத் தொகுதி, எல்லை மறுவரையறைக்கு உட்படுத்தப்பட்டு குடியரசுக் கட்சிக்கு சாதகமாக மாற்றப்பட்ட ஒரு தொகுதியாகும்.
இந்த புளோரிடா மாகாணத்தில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் தெற்காசிய இந்திய வம்சாவளி நபர் என்ற சாதனையைப் பியா தண்டியா பெற்றுள்ளார்.
மேலும், பிரமிலா ஜெயபாலுக்குப் பிறகு அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது இந்திய-அமெரிக்க பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தியக் குடியேற்றத் தம்பதியரின் மகளான பியா தண்டியா, ஒரு முன்னாள் பள்ளி முதல்வர், கல்வியாளர் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.
சிலிக்கான் வேலி இருக்கும் கலிபோர்னியாவின் 17-வது நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கண்ணா பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 72 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான இந்திய அமெரிக்க தொழில்முனைவோரான ரிதேஷ் தாண்டனை தோற்கடித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பதவி காலத்தை அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
கலிபோர்னியாவின் 3-வது நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு, குடியரசுக் கட்சியின் ராப் டக்கரை வீழ்த்தி இந்திய வம்சாவளியினரான அமி பேரா (Ami Bera), மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
கலிபோர்னியாவில் இருந்து முதன்முதலில் 2013-ல் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட
அமி பேரா (Ami Bera) அமெரிக்க அரசியல் களத்தில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை வலுப்படுத்தியதில் பெரும் பங்காற்றியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் வாஷிங்டன் மாநிலத்தின் 7-வது நாடாளுமன்றத் தொகுதியை 2017 முதல் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமிளா ஜெயபால், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கப் பெண்மணி ஆவார்
அரிசோனாவின் 1-வது நாடாளுமன்றத் தொகுதிக்கான (Arizona’s 1st Congressional District) ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவர் அமிஷ் ஷா, அரிசோனா மாநிலப் பிரதிநிதிகள் சபையின் முன்னாள் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். சுமார் 54.8 சதவீத வாக்குகளுடன் வெற்றிப் பாதையில் உள்ளார்.
நியூயார்க்கில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் கூட்டாட்சி வழக்கறிஞருமான சரிதா கோமடிரெட்டி, தலைமை வழக்கறிஞர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் தற்போதைய பதவியில் இருக்கும் லெட்டிஷியா ஜேம்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.
வட கரோலினாவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மகேஷ் கணோர்கரும், ஓஹியோவில் சுயேச்சை வேட்பாளர் சந்தீப் தீட்சித்தும், மிச்சிகனில் சுயேச்சை வேட்பாளர் அனில் குமாரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர்.
மாநில சட்டமன்ற அளவில், பென்சில்வேனியாவின் பிரதிநிதிகள் சபை தொகுதி 30-ல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அரவிந்த் வெங்கட் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ராம் வில்லிவலம் இல்லினாய்ஸ் செனட் சபை 8 வது தொகுதியைத் தக்க வைத்துள்ளார்.
இல்லினாய்ஸ் செனட் சபை 26-வது தொகுதியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய-அமெரிக்கரான நபீலா சையத், குடியரசுக் கட்சியின் தற்போதைய உறுப்பினரான டார்பி ஹில்ஸை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
















