லண்டனில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.
லண்டனில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, பிரிட்டனில் செயல்படும் 50-க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகள், குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளன.
இந்திய தேசிய மாணவர் சங்கம், பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த மாதம் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் நாடாளுமன்ற சதுக்கம் முன்பு நடைபெற்ற போராட்டங்கள், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கைகள் எனக் குற்றம்சாட்டியுள்ளன.
பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த சில அடிப்படைவாத அமைப்புகள் மற்றும் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளன.
மேலும், போராட்டங்களுக்குப் பின்னால் தீவிரவாதக் குழுக்களின் நிதியுதவி உள்ளதா என்பது குறித்து இந்தியப் புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்றும், தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன.
















