திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் இஸ்லாமிய மத அடையாளங்களுடன் பெண் ஒருவர் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், பிற மதத்தினர் சுவாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறையால் வழங்கப்படும் உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பம் இடுவது நடைமுறையாகும்.
இந்த நிலையில் இஸ்லாமிய பெண் ஒருவர் தனது மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் நுழைந்ததோடு தரிசனம் முடிந்து வெளியேறும் வாயிலில் இருந்து இயல்பாக வெளியேறினார்.
இவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் இஸ்லாமிய பெண் கோயிலுக்குள் நுழைந்தது எப்படி? அவர் உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டாரா? என்ற கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கருவறைக்கு செல்லும் வழியில் பல பாதுகாப்புகள் இருந்தும் பெண் உள்ளே நுழைந்தது எப்படி என்ற சந்தேகம் அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.
இஸ்லாமிய அடையாளத்துடன் பெண் கோயிலுக்குள் நுழைந்த சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்துள்ள இந்து முன்னணி, சில கேள்விகளையும் முன்வைத்துள்ளது, அதில் வேற்று மத அடையாளத்துடன் கோயிலுக்குள் நுழைந்த பெண்ணின் நோக்கம் என்ன? எனவும் பிற மதங்களின் அடையாளத்துடன் யாரும் கோயிலுக்குள் நுழையக்கூடாது என நீதிமன்ற உத்தரவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீதிமன்ற உத்தரவை அவமதித்த கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி தனது கண்டன பதிவில் தெரிவித்துள்ளது.
















