திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பஞ்ச மூர்த்திகளின் மரத்தேர்களில் பொருத்தப்படும் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் ஏழாம் நாளான நவம்பர் 21-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் மகா ரதங்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக, அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் தேர்களின் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர்களின் உச்சியிலும் கலசங்கள் பொருத்தப்பட்டன.
















