மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்கு வராததால் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட விவசாயி அழகர் ராஜுடன் நமது செய்தியாளர் ஜெகதீசன் நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்க்கலாம்…
டெல்டா மாவட்டத்தின் விவசாயத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானால் வர ஆண்டுகளில் மக்களுக்கு உணவு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகிவிடும்.*
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக கடந்த செப்டம்பர் 1-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கல்லணைக்கு தண்ணீர் வந்தடைந்த நிலையில், செப்டம்பர் 3-ந்தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கினர்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சரிவர கடைமடை பகுதிக்கு வராததால் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகி உள்ளது சில இடங்களில் சம்பா சாகுபடி தொடர முடியாத அளவிற்கு தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது இது குறித்து திருவாரூர் மாவட்ட விவசாயி அழகர்ராஜிடம் கலந்துரையாடல் செய்த போது தெரிவித்ததாவது…
ஜூன் 12 குருவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுவார்கள் ஆனால் இந்த ஆண்டு ஒருபோக சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். ஆனால் திருவாரூர், நாகப்பட்டினம் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் சரியான திட்டமிடுதல் இல்லை. வருகின்ற தண்ணீரை ஒவ்வொரு ஆற்றுக்காக பகிர்ந்து அளிப்போம் என்கின்ற திட்டம் இல்லை . தண்ணீரை ஒரேடியாக 300 கன அடி, 400 கன அடியாக தரும் பொழுது அது ஆற்றோட போகிறது தவிர வாய்க்காலுக்கு வந்து சேரவில்லை. இந்த நிலைமை திருவாரூர் மாவட்டம் முழுவதும் நிலவுகிறது.
முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கங்களாஞ்சேரி, பூந்தோட்டம் இந்தப் பகுதி முழுவதும் தண்ணீர் முழுமையாக பாசனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு விவசாயிகளின் கருத்தை கேட்டு தண்ணீரை தாமதமாக திறந்து இருக்கலாம். குளம், குட்டை நிரப்புவதற்கும், ஆடு ,மாடுகளுக்கு பயன்படுவதற்கும் தண்ணீரை விடுகிறோம் விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என சொல்லி இருக்கலாம்.
ஒரு பக்கம் சூப்பர் எல்லினோ தாக்குதலில் கடுமையான வெப்பத்தால் 20 நாள், 30 நாள் பயிர்கள் முளைத்து வந்து கருகிவிடுகிறது.
இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் தண்ணீர் தரவில்லை என்றால் மீதமுள்ள பயிர்களும் கருகிவிடும். டெல்டா மாவட்டத்தின் விவசாயத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானால் வர ஆண்டுகளில் மக்களுக்கு உணவு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகிவிடும்.
தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்த வேண்டும். பொதுப்பணி துறையை தனி கவனம் செலுத்த சொல்ல வேண்டும். வருகின்ற காலங்களில் தண்ணீரை கொடுத்து விவசாயிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குருவை காப்பீட்டுத் தொகையை தமிழக அரசு தர வேண்டும்.
தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் எத்தனை ஏக்கர் அளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய்தவர்கள் எந்தவிதமான பாதிப்புகளை சந்தித்து உள்ளார்கள் அதைப் பற்றி கேட்டபொழுது…
திருவாரூர் பகுதியில் குடவாசல், நன்னிலம், வலங்கைமான் ஆழ்துளை கிணறு மூலம் குருவை சாகுபடி செய்து அறுவடை செய்து விட்டார்கள் அங்கு பெரிதளவு பாதிப்பு இல்லை.
ஆனால் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் இந்த மூன்று வட்டாரங்களும் ஒன்றரை லட்சம் ஏக்கர் வரை நேரடி விதைப்பு செய்துள்ளார்கள் இந்தப் பயிர்கள் அனைத்தும் அதிகளவு பாதிப்படைந்துள்ளது. நன்னிலம் வட்டாரங்களில் சில இடங்களில் ஆழ்துளை கிணறு வசதி இல்லை அந்த இடங்கள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக மூன்று லட்சம் ஏக்கர் அளவில் குருவைப் பயிரிடப்பட்டுள்ளது அதில் 60% அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது. மூன்று லட்சம் ஏக்கர் அளவில் நேரடி விதைப்பு செய்து உள்ளார்கள். ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் அவ்வப்போது பெய்யும் மழையில் முளைத்து வந்துள்ளது. மீதமுள்ள இரண்டு லட்சம் ஏக்கர் முளைக்காமலே கிடந்து கிடக்கிறது.
ஒன்று தண்ணீரை விட வேண்டும் அல்லது மழை பெய்ய வேண்டும் இரண்டு நாட்களில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது ஆனால் இதுவரை மழை பெய்யவில்லை.
மழை பெய்ய வேண்டும் இல்லை என்றால் தண்ணீர் தர வேண்டும் விவசாயிகள் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும். இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டினுடைய உணவு உற்பத்தியை பெரிதளவு பாதிக்கும்.
தற்பொழுது நீங்கள் அரசிடம் எந்தவிதமான கோரிக்கை வைத்து உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது…
தற்பொழுது செய்தி பார்த்தேன் அதில் 67 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதிகபட்சம் 20 நாட்கள் அல்லது 15 நாட்கள் தான் தண்ணீர் தர முடியும். விவசாயிகள் அடுத்து என்ன செய்யலாம் ஒன்று இயற்கையை நம்பி விவசாயம் செய்யலாமா அல்லது தண்ணீர் தரலாமா என அரசு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும்.
போர்க்கால அடிப்படையில் இருக்கின்ற தண்ணீரை எல்லா இடங்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். பொதுப்பணி துறையை முன்னெச்சரிக்கையாக வைத்திருக்க வேண்டும். பருவ மழை பெய்கின்ற பட்சத்தில் பரவாயில்லை பருவ மழை பெய்யாமல் போயிருந்தால் விவசாயிகளை காப்பாற்ற என்ன செய்யலாம் என அவசர ஆலோசனை அரசு நடத்த வேண்டும் என கூறினார்.
















