தீபாவளியை கொண்டாட நாடே தயாராகி வரும் நிலையில் பட்டாசு சத்தங்களும் கேட்கத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழகத்திலோ ஒரு கிராமத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும் பட்டாசுகளே வெடிப்பதில்லை என்பது ஆச்சரியம் தானே..! அப்படி பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்பது ஏன்? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது கொள்ளுக்குடிப்பட்டி. இந்த கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவருமே விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வரும் நிலையில் அந்த விவசாயத்திற்கு நீராதாரமாக திகழும் கண்மாய், கிராமத்தின் வடமேற்கு பகுதியில் சுமார் 17 ஹெக்டர் அளவில் அமைந்துள்ளது.
இந்த கண்மாய்க்குள் வளர்ந்துள்ள மரங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் சில வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்தன. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடிய பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த கண்மாயை மட்டுமின்றி 3 கண்மாய்களை சேர்த்து 38 ஹெக்டர் நிலத்தினை வனத்துறை கைப்பற்றியது. கடந்த 1977 ஆம் ஆண்டு வேட்டங்குடி பறவைகள் சரணாலயமாக அறிவித்தது.
பர்மா, மலேசியா, கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், மத்திய தென் ஆப்பிரிக்கா, நார்வே உள்ளிட்ட நாடுகளில் இருந்து நைட் ஹெரான், கிரே ஹெரான், கேட்டில் ஈக்ரேட், பெயிண்டட் ஸ்டார்க், வொயிட் ஐபீஸ், ப்ளாக் ஐபீஸ், ஸ்பூன் பில்,ஸ்பாட் பில் உள்ளிட்ட பறவைகள் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு படையெடுத்து வருகின்றன. நவம்பர் மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை தங்கி இனப்பெருக்கத்தை முடித்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்புகின்றன. இங்கு வந்து செல்லும் பறவைகளை வைத்தே கிராம மக்கள் விவசாயத்தை கணிக்கின்றனர். எனவே பறவைகளையும் தங்களது உறவுகளாகவே கருதுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பறவைகளின் எண்ணிக்கை உயர்ந்து தற்சமயம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் ஆண்டு தோறும் வந்து செல்கின்றன. எனவேதான் பறவைகளை அச்சுறுத்தும் எந்த செயல்களையும் கொள்ளுக்குடிப்பட்டி கிராம மக்கள் மேற்கொள்வதில்லை. அதிக ஒலி எழுப்பும் எந்த ஒரு செயலையும் தவிர்ப்பதுடன் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளே வெடிப்பதில்லை.
தீபாவளி மட்டுமல்ல…. கிராமத்தில் நடைபெறும் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு கூட பட்டாசுகள் வெடிப்பதில்லை. தீபாவளியை புத்தாடை மற்றும் இனிப்புடன் முடித்துக்கொள்கின்றனர். இந்த பழக்கம் 3 ஆவது தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
பறவைகளுக்காக தமது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியையே தியாகம் செய்யும் கிராம மக்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றனர். சகல உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்பதையே அவர்களின் செயல் சத்தமில்லாமல் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
















