நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்த உதகை பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜனை, போலீசார் அலுவலகத்திலேயே தடுத்து வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்எல்ஏ போஜராஜன், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு அனுமதி மறுப்பதாகக் குற்றம்சாட்டினார். உடனடியாக தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ள போலீசாரின் நடவடிக்கைக்கு அவர் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் அன்னூரில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை காண்பதற்காக காரில் சென்றபோது தடுத்து போலீசார் திருப்பி அனுப்பினர்.
இதேபோல் பாஜக மாநில சுற்றுச்சூழல் அணித் தலைவர் கோபிநாத், காலை தனது நண்பர்களுடன் காரில் திருப்பரங்குன்றம் செல்ல புறப்பட்டார். போலீசார் கைது செய்வதைத் தவிர்க்க, சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள வீட்டிலிருந்து கந்தம்பட்டி பைபாஸ் வழியாக கோவை தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தனது இருசக்கர வாகனத்தை காரின் குறுக்கே நிறுத்தி மறித்ததால், பாஜக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
















