நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர், கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை மக்களவை கூடியவுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து, தற்போது வரை நாடாளுமன்ற நடவடிக்கைகள் முறையாக நடைபெற முடியாமல் முடக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு மத்தியிலும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
பிறப்பு – இறப்பு பதிவு திருத்த மசோதா, கடலோரப் பகுதிகள் கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, எஸ்.சி. தொடர்பான அரசியல் சட்ட ஆணை திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் குறுகிய நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில், பிறப்பு – இறப்பு பதிவு திருத்த மசோதாவானது, பிறப்பு சான்றிதழை கல்வி நிறுவன சேர்க்கை, ஓட்டுனர் உரிமம் பெறுதல், வாக்காளர் பட்டியல், ஆதார் எண் பெறுதல், திருமண பதிவு, அரசு பணி நியமனம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரே ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கிறது. மேலும், தேசிய, மாநில அளவிலான பிறப்பு – இறப்பு தகவல் தொகுப்பை உருவாக்க வழிவகுக்கிறது.
அதேபோல, மத்திய கூட்டுறவுத்துறை இணை அமைச்சர் பி.எல்.வர்மா, பன்மாநில கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா, கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தவும், அவற்றுக்கு வழக்கமாக தேர்தல் நடத்தவும் வழிவகை செய்கிறது. தேர்தல் நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, மாநிலங்களவையில், மத்தியஸ்த மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில், வணிகம் தொடர்பான சர்ச்சைகளில் மத்தியஸ்த தீர்வுக்கு உடன்படுவது கட்டாயம் அல்ல என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், மத்தியஸ்த நடைமுறைகளை முடிப்பதற்கான கால அவகாசத்தை 180 நாட்களாக குறைக்கவும் இம்மசோதா வழிவகை செய்கிறது.
சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை திருத்தம்) மசோதா 2023, தேசிய செவிலியர் மற்றும் மருத்துவர் ஆணைய மசோதா 2023, தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதா 2023 ஆகிய 3 முக்கிய மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதேபோல், வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது நாட்டின் எல்லையிலிருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் உள்ள நிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கவும், வனப்பகுதியில் உயிரியல் பூங்கா, சஃபாரி மற்றும் சூழிலியல் சுற்றுலா அமைக்கவும் வழிவகை செய்கிறது. காடுகளையும் அவற்றின் உயிர்ப் பன்மையையும் பாதுகாப்பது, காலநிலை மாற்றத்தின் சவால்களை சமாளிப்பது ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிடும் வகையிலான முகவுரை இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டத்தின் பெயர் ‘வன் (சம்ரக்ஷண் ஏவம் சம்வர்த்தன்) அதினியம்’ என்று மாற்றப்பட்டுள்ளது (வனப் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பது இதன் பொருள்). 1980 அல்லது அதற்குப் பிறகு ஏதேனும் ஓர் அரசு ஆவணத்தில் ‘காடு’ என்று அறிவிக்கப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1980-லிருந்து 1996-க்குள் காடு என்று அறிவிக்கப்பட்ட நிலம், சட்டப்படி காடு சாராத பயன்பாடுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால் வனப் பாதுகாப்புச் சட்டம் பொருந்தாது.
முக்கியமாக, திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதாவது, 1952-ம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் கடைசியாக 1984-ம் ஆண்டுதான் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன் பிறகு, 40 ஆண்டுகள் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சூழலில், ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம், சில மதிப்பீடுகளின் அடிப்படையில் திரைத்துறைக்கு 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தும் சினிமா திருட்டு அச்சுறுத்தலை முற்றிலுமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது.
சினிமா திருட்டில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 3 மாதம் சிறைத் தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதோடு, தணிக்கை செய்யப்பட்ட மொத்த உற்பத்தி செலவில் 5% வரை அபராதமும் விதிக்கப்படும். இம்மசோதா மீது நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “நமது வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையைக் காட்டும் கதை சொல்லிகளின் நாடாக இந்தியா அறியப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் நமது திரைப்படத் துறை 100 பில்லியன் டாலராக வளர்ந்து, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும். மாறிவரும் காலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சினிமா திருட்டைத் தடுக்கவும், திரைத்துறையை மேலும் மேம்படுத்தவும் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.
ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதாவது, தொழில்முனைவோர்கள் செய்யும் சின்னச் சின்ன தவறுகளுக்கு இனிமேல் சிறைத் தண்டனை கிடையாது. ஜன் விஸ்வாஸ் என்றாலே மக்களின் நம்பிக்கை அல்லது மக்களின் மேலுள்ள நம்பிக்கை என்று பொருள். இந்த சட்டத் திருத்தத்தில் 19 அமைச்சரவைக்கு கீழுள்ள, பல்வேறு தொழில் மற்றும் மக்கள் செயல்பாடுகள் குறித்த 42 சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டங்களில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள சிறிய, நடைமுறையில் ஏற்படக் கூடிய மற்றும் டெக்னிக்கல் தவறுகளுக்கு சிறைத்தண்டனை கிடையாது என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மொத்தம் 31 மசோதாக்கள் நிறைவேற்றப்பட திட்டமிடப் பட்டிருந்தது. இவற்றில் இதுவரை 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சியுள்ள மசோதாக்கள் வரும் நாட்களில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வருகிற 11-ம் தேதியோடு நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.