ஊழலுக்கு எதிரான தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின், “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையின் ஆறாம் நாளான இன்று திருமயத்தில் மேற்கொண்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இருபுறமும் நின்ற மக்களிடம் அண்ணாமலை குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பாஜகவைப் பொறுத்தவரை இந்த யாத்திரை மக்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பு. நாம் சொல்லும் கருத்துக்களைச் சாமானிய மக்களும் ஏற்றுகிறார்கள்.
இந்த 9 ஆண்டுகள் பிரதமர் மோடி மாற்றத்தைத் தந்துள்ளார் என்றும் எண்ணுகிறார்கள். இந்த யாத்திரை மூலம் நல்லதொரு மாற்றம் வரும் என்பது எங்களது நோக்கம். விமர்சனங்கள் வைக்க வைக்க நாம் செய்யக்கூடிய வேலை சரி என்று நமக்கு தோன்றும். யாத்திரை மக்களைச் சென்றடைகிறது, யாத்திரைக்கான நோக்கம் நிறைவேறுகிறது என்பதை எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களே நமக்கு காட்டுகின்றன . எங்களைப் பொறுத்தவரை இருப்பதை இருப்பதாகவும், செய்ததைச் சொல்கின்றோம். நாங்கள் பொய் சொல்வது கிடையாது.
பிரதமர் மோடி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது, ஆட்சியில் திமுக செய்யும் குற்றங்களை ஆதாரத்துடன் தந்து வருகின்றோம். எதையும் பேச வேண்டும் என்பதற்காக பேசாமல், செய்த வேலையை மக்களிடம் சொல்லி மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க ஆதரவு கேட்டுக் கொண்டு வருகின்றோம். இந்த யாத்திரையைப் பொறுத்த வரையில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தமிழ்நாட்டில் வெல்ல வேண்டும். இந்த யாத்திரை முடியும்போது தெரியும்.
பாஜக தனது வேலையைச் செய்கிறது அதிமுக அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது, அதனால் கூட்டணி கட்சி கூட்டத்திற்கும் அழைப்புகள் விடுக்கப்பட்ட உள்ளது. இதில் யாருக்கும் வருத்தம் கிடையாது. திமுகவின் ஊழல் முதல் பட்டியல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வெளியிடப்பட்டது. இரண்டாவதாக வெளியிடப்பட்ட பட்டியல் நடவடிக்கைக்காக வெளியிடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்ட புகார்கள் எதற்கும் நடவடிக்கை எடுக்காததால், தற்பொழுது இந்த பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது, ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்.
இந்தியாவிலேயே இதுவரை நடந்த ஆட்சியில் சிறந்த ஆட்சியாக பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது. இந்த நல்லாட்சியை யாருடனும் ஒப்பிட முடியாது. எல்லா விதத்திலும் எல்லாருக்குமான பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியாக உள்ளது. இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள். அரசியலில் சித்தாந்தத்தின் அடிப்படையில் எதிர்ப்பது வேறு, பொய்யின் அடிப்படையில் எதிர்ப்பது தவறு. 2019-ல் அதைத்தான் இங்கு செய்தார்கள். ஆனால் இம்முறை மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
தமிழ்நாட்டில் இன்று ஊழலை எதிர்த்து பேசக்கூடிய கட்சி பாஜக தான். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறை சுட்டிக்காட்டுவது பாஜக தான்.
நம்மைப் பொறுத்தவரை அமித்ஷா சொன்னதை போல இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஊழல் செய்யக்கூடிய அரசாங்கமாக இருப்பது திமுக தான் அதைத்தான் மக்கள் மன்றத்தில் வைக்கின்றோம் என தெரிவித்தார். நான் எந்த இடத்திலும் போட்டியிடவில்லை பாதயாத்திரை முடித்துவிட்டு கட்சிப் பணியை செய்யத்தான் நேரம் இருக்கிறது என் வேலை கட்சியை வளர்ப்பது கட்சி வேலை செய்வது என்று கூறினார்.