பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் இருந்து வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் திடீரென இரவோடு இரவாக கலைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆகவே, பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக் இ இன்சாப் கட்சி, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றி, பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்து வந்தார். இக்கூட்டணி 4 ஆண்டுகள் நீடித்த நிலையில், அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்தாண்டு இம்ரான் கான் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் திடீரென திரும்பப் பெற்றன. இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வியடைந்தது. இதன் பிறகு, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்றார்.
இதன் பிறகு, இம்ரான் கான் மீது ஊழல், கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை அரசு கஜானவில் சேர்க்காமல், அதனை விற்று பணத்தை மோசடி செய்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று இரவோடு இரவாக திடீரென கலைக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையின் பேரில், அதிபர் ஆரில் ஆல்வி, இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிகாலம் முடிய இன்னும் 3 நாட்களே மீதமிருக்கும் நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டால், 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும். அதேசமயம், பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கலைத்துவிட்டால், தேர்தலை நடத்த 90 நாட்கள் கால அவகாசம் உண்டு. ஆகவே, கூடுதலாக 30 நாட்கள் கிடைக்கும் என்கிற நோக்கத்திலேயே, பதவிக்காலம் முடிவதற்கு முன்பே நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.