ஆன்லைன் சூதாட்டத்துக்கு 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பெரும்பாலான நாட்கள் இரு அவைகளும் முடங்கின. எனினும், திட்டமிட்டப் படி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த வகையில், ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பான இரு மசோதாக்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இந்த இரு மசோதாக்களுக்கும் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தின் மீதான விவாதம், கடந்த 8, 9-ம் தேதிகளில் நடந்தது. அப்போது, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பேசினார்கள். இதற்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜூஜூ, ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் பதிலடி கொடுத்தனர். நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி, 2 மணி நேரத்திற்கும் மேலாக பதில் உரை அளித்தார்.
இந்த நிலையில், இன்று இரு அவைகளும் கூடின. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.