தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் என IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கர்நாடகா அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவி பச்சமுத்து, தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயகக் கட்சியினர் கர்நாடக அரசைக் கண்டித்தும், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
சாலைகள், நதிநீர் உள்ளிட்ட அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்குச் சொந்தமானவை அல்ல எனக்கூறிய அவர், நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், தமிழகத்திற்கு உரிய முறையில் தண்ணீரை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
















