சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழா, பெற்றோரின் கனவும் தேசப்பற்றும் சங்கமித்த உணர்வுப்பூர்வமான நெகிழ்ச்சியான விழாவாக மாறியது. இது குறித்த செய்தித்தொகுப்பை காணலாம்…….
சென்னை பரங்கிமலையில் உள்ள OTA எனப்படும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த அகாடமி, இந்திய ராணுவத்திற்காக திறமையான இளம் அதிகாரிகளை உருவாக்கி வருகிறது.
இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 11 மாதங்கள் சிறப்பான ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்திய ராணுவ அதிகாரிகள் மட்டுமின்றி, தான்சானியா, பூடான், உகாண்டா, ஜிம்பாப்வே உள்ளிட்ட பல்வேறு நட்பு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் இங்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று ராணுவத்தில் இணைந்துள்ளனர்.
அசோக சக்ரா விருது வென்ற மேஜர் முகுந்த் வரதராஜன், மேஜர் ஸ்ரீ ராம்குமார் உள்ளிட்ட இந்திய வரலாற்றில் இடம்பிடித்த, பல ராணுவ அதிகாரிகளை உருவாக்கிய பெருமை சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியையேச் சேரும். ஆண் அதிகாரிகளுக்கு இணையாகப் பெண் அதிகாரிகளுக்கும் சமமான வாய்ப்பளித்து, நாட்டின் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதில் இந்த அகாடமி முக்கிய பங்கு வகிக்கிறது.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நடப்பாண்டில் பயிற்சியை முடித்துவிட்டு 342 அதிகாரிகள் இந்திய ராணுவத்தில் இணைந்துள்ளனர். அதில் 29 பேர் பெண் அதிகாரிகள் என்பது கூடுதல் சிறப்பு. தமிழ்நாட்டில் இருந்து 8 பேர் பயிற்சியை முடித்துவிட்டு, தாய்நாட்டிற்காக கடமையாற்ற உள்ளனர்.
மேலும், தான்சானியா, பூடான், உகாண்டா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 10 பெண் அதிகாரிகள் உட்பட 17 ராணுவ அதிகாரிகள் தங்களின் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
பயிற்சி நிறைவு விழாவில் இந்திய ராணுவ அதிகாரிகளும், அயல்நாடுகளின் ராணுவ அதிகாரிகளும் ஒற்றுமையோடு தண்டால் எடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதனும் தண்டால் எடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நடப்பாண்டில் சென்னை OTA பயிற்சி நிறைவு விழா, பெற்றோரின் கனவும் தேசப்பற்றும் சங்கமித்த உணர்வுப்பூர்வமான நெகிழ்ச்சியான விழாவாக மாறியது. பள்ளிப்பருவத்தில் இருந்தே ராணுவத்தில் இணைந்து நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததாக கூறுகிறார் லெப்டினன்ட் சிவசுப்ரமணியன். தன்னுடைய மகன் ராணுவத்தில் இணைந்தது பெருமையாக உள்ளதாக நெகிழ்கிறார் சிவசுப்பிரமணியத்தின் தாய்.
தன்னுடைய தாயால் நிறைவேற்ற முடியாத ராணுவ அதிகாரி கனவை நனவாக்கியுள்ளார் லெப்டினன்ட் ரஷ்வந்த். “பிறந்ததற்கு ஒரு அர்த்தம் வேண்டும், தேசத்திற்காக சேவையாற்ற வேண்டும்” என்ற அவரது தாயின் வார்த்தைகள் தேசப்பற்றின் உன்னதத்தை உணர்த்துகின்றன.
தந்தைதான் தனக்கு கதாநாயகன் என பெருமிதம் தெரிவிக்கும் லெப்டினன்ட் விஷ்ணுவர்தன், தந்தையின் சீருடைதான் ராணுவத்தில் சேர வேண்டுமென்ற உத்வேகம் அளித்ததாக தெரிவிக்கிறார். தன்னுடைய மகன் ராணுவத்தில் இணைந்தது பெருமிதம் அளிப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் லெப்டினன்ட் விஷ்ணுவர்தனின் பெற்றோர்.
பெற்றோரின் கனவை நனவாக்கி, தேசப்பற்றையும் வெளிப்படுத்தியுள்ள இளம் ராணுவ அதிகாரிகள், தங்களின் விடாமுயற்சியின் மூலம் இளம் தலைமுறைக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.
















