மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஜி20 அமைப்பின் ஊழல் எதிர்ப்பு மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, “ஊழலுக்கு எதிராக இந்தியா கடுமையாகப் போராடி வருகிறது. ஊழலுக்கு எதிராக போராடுவது மக்களுக்கு நாம் செய்யும் புனிதமான கடமையாகும். ஊழலின் தாக்கம் ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களிடம் அதிகம் காண முடிகிறது.
வணிகங்களுக்கான பல்வேறு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டிருக்கின்றன. அரசு சேவைகளில் தானியங்கி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் அதிகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு சொத்துக்களை விரைவாக மீட்பதற்காக, தண்டனை அல்லாத பறிமுதல் முறையை ஜி20 நாடுகள் உருவாக்க வேண்டும். இது உலகிற்கே முன்மாதிரியாக இருக்கும். மேலும், தப்பியோடிய குற்றவாளிகள் நாடு திரும்புவதை உறுதி செய்யும்.
சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையே முறைசார ஒத்துழைப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டதில் மகிழ்ச்சி. காரணம், தப்பியோடும் குற்றவாளிகளைச் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிப்பதை இந்த ஒப்பந்தம் தடுக்கிறது. மேலும், சரியான நேரத்தில் குற்றவாளிகளின் சொத்து மற்றும் வருமானத்தை அடையாளம் காண்பதும் முக்கியமானதாகும். அதோடு, உள்நாட்டு சொத்து மீட்பு வழிமுறைகளை மேம்படுத்துவதையும் நாம் ஊக்குவிக்க வேண்டும்.
2018-ம் ஆண்டு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை இயற்றினோம். இதன் பிறகு, 1.18 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை மீட்டிருக்கிறோம். அதேபோல, பண மோசடி தடுப்பு நடவடிக்கைகளில் 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை 12 பில்லியன் டாலருக்கும் மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.