2024 நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக, வடமாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், மேற்குவங்கத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர், நேற்று இரவு கொல்கத்தா சென்றனர். அவர்களுக்கு மேற்கு வங்க பா.ஜ.க. மாநிலத் தலைவர் சுகந்தா உள்ளிட்ட நிர்வாகிகள் கொல்கத்தா விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவுக்குச் சென்றனர். இரவு அங்கு தங்கியவர்கள் இன்று காலை கிழக்கு பகுதியான மேதினிபூரில் உள்ள கோலாகாட்டுக்குச் சென்றனர். அங்கு பா.ஜ.க. நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக உரையாடினர்.
மேற்குவங்க மாநிலத்தின் கிழக்குப் பகுதி என்பது, மேற்குவங்கம் தவிர, பீகார், ஜார்க்கண்ட், ஒடிஸா, அந்தமான மற்றும் நிக்கோபார் தீவுகளையும் உள்ளடக்கியதாகும். இதில் அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் அடங்கும். சமீபத்தில் மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 134 ஊராட்சி ஒன்றியங்களில் 31 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.