மோடி இருப்பதால்தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!
பிரதமர் மோடி இருப்பதால்தான் தமிழ்நாடும் இருக்கிறது. இல்லையென்றால் தி.மு.க. குடும்பம் ஜிஸ்கொயர் மூலம் பட்டா போட்டு விற்றிருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையிலும், தமிழக தி.மு.க. அரசின் ஊழல், முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையிலும், என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். அந்தவகையில், நடைப்பயணத்தின் 15-வது நாளான இன்று தூத்துக்குடியில் பிரசாரம் செய்த அண்ணாமலை, ” மீண்டும் மோடி பிரதமரானால் தமிழகம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். உண்மையைச் சொல்லப்போனால் மோடி இருப்பதால் தான் தமிழகம் இருக்கிறது. இல்லையெனில் தி.மு.க.வின் மொத்த குடும்பமும் ஜி ஸ்கொயர் மூலம் பட்டா போட்டு தமிழகத்தை விற்றிப்பார்கள்.
தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியதை வைத்தே தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்தி விடலாம். தூத்துக்குடி மண் உப்புக்கு பெயர் பெற்றது. தமிழக அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, உப்பு உற்பத்தியில் முதல் மாநிலமாக இருக்கும் குஜராத்தில், அரசு பல்வேறு உதவிகளை செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது, திராவிட மாடல் அரசு, குஜராத் மாடலை பாராட்டி இருக்கிறது..தமிழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பலாலாயிரம் கோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கியுள்ளது.
ஆனால், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மத்திய அரசிடமிருந்து நிதிகளை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நாடாளுமன்றத்தில் கூச்சலிடுவது போன்ற நிகழ்வுகளை செய்து குடும்பச் சண்டையில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சித்து வருகிறார். மருத்துவமனையில் இருக்கும் டாஸ்மாக் அமைச்சரை மகன், மருமகன், முதல்வர் என வரிசையாக சந்தித்து தங்களை மாட்டி விடாதே என்று கூறினார்கள்.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதை செய்யவில்லை. குறிப்பாக, ஒரு சொட்டு மது இருக்காது என்றார்கள். ஆனால், தற்போது மதுவிலக்கு மற்றும் தி.மு.க.வினர் நடத்தி வரும் சாராய ஆலைகள் குறித்து கனிமொழியிடம் கேள்வி எழுப்பினால் தெறித்து ஓடி விடுகிறார். தி.மு.க. நிர்வாகிகள் நடத்தும் சாராய ஆலைகள் மூலம் 40% டாஸ்மாஸ்கிற்கு மது விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல, இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை.
குரூப் 4 தேர்வு முடிவுகளை கடந்த 13 மாதங்களாக வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். அதேசமயம், புரோக்கர்கள் மூலம் பேசி அரசுப் பணியிடங்களை நிரப்ப முயற்சி செய்து வருகிறார்கள். தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆறுகளில் தண்ணீர் வரவில்லை என்றால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனால், விவசாயிகளுக்கு திண்டாட்டம்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறுவோம். அதேபோல, தமிழகத்திலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். மோடி மீண்டும் வெற்றிபெற்று பிரதமராவார். கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த தொழிற்சாலையும் வரவில்லை. முதல்வர் ஸ்டாலின் துபாய்க்குச் சென்று 10 கோடி ரூபாய்க்க ஒப்பந்தம் போட்டார். ஆனால், அவர் டீக்குடித்த 1 ரூபாய் கூட இதுவரை தமிழகத்திற்கு வரவில்லை. இவர்கள் துபாய்க்குச் சென்றது முதலீட்டை ஈர்க்க அல்ல, பணப் பரிமாற்றத்திற்காக” என்று கூறினார்.