நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியேற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மேலும், அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட ஒத்திகை இன்று நடந்தது.
இதன் காரணமாக, டெல்லியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து டெல்லி மாநகர போலீஸார் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “நேதாஜி சுபாஷ் மார்க், லோதி சாலை, எஸி.பி. முகர்ஜி மார்க், சாந்தினி சவுக் சாலை,நிஷாத்ராஜ் மார்க், எஸ்பிளனேடு சாலை, அதன் இணைப்பு சாலை, ராஜ்காட், ஐ.எஸ்.பி.டி. வரையிலான வெளிவட்டச் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சுதந்திர தினவிழாவில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, டெல்லி செங்கோட்டை பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதன்படி, செங்கோட்டை, ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு, ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தீவி கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.