ஆண்டுதோறும் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 76-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க அமெரிக்க பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து இந்திய அமெரிக்க உறுப்பினர் ஸ்ரீ தானேதர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ” இந்தியாவின் 76- வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியின் செங்கோட்டையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் எங்களைப் பிரதமர் மோடி அழைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமரின் அழைப்பை ஏற்று நாங்கள் இந்தியா வந்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் “இந்தக் குழு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் ஆகியோரையும் சந்தித்து பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறை குறித்து விவாதிக்கும் என்றும், இதன் மூலம் எனது சொந்த மாநிலமான மிச்சிகனுக்கும் எனது சொந்த மாவட்ட நகரத்தின் டெட்ராய்ட்டிற்கும் பயனளிக்கும்” என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “உலகநாடுகளில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒரு நல்ல நட்புறவு இருப்பதாகவும், இந்தியாவுடன் நட்போடு இருப்பது அவசியம்” என்றும் தெரிவித்தார்.