நாட்டின் 75-வது சுதந்திரம் நிறைவு பெற்று, நாளை 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கிறது. இதை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து 1,800 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
நிகழ்ச்சியை முன்னிட்டு, தேசிய தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் தேசியக்கொடி ஏற்றவிருக்கும் செங்கோட்டை, ராஜ்காட் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, செங்கோட்டை பகுதியில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டிருக்கிறது.
தலைநகர் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.