நமது இன்றைய நடவடிக்கைகள் 1,000 ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக் கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இன்று நம்மிடம் இருக்கும் ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை ஆகியவை தேசத்தின் கனவுகளை நனவாக்கும் திறன் கொண்டவை. நான் கடந்த 1,000 ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறேன். ஏனெனில் நமது நாட்டுக்கு இன்னொரு வாய்ப்பு இருப்பதை நான் காண்கிறேன்.
ஆகவே, இந்தக் காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, நாம் நமது அடிகளைக் கவனமாக முன்வைக்க வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக நாம் எடுத்து வைக்கும் அடிகள் 1,000 ஆண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும், முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கும் திறன் நமது நாட்டிற்கு உண்டு,
இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக் கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி. இதன் காரணமாகவே, ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஜி20 அமைப்பின் நிகழ்வுகள் நடந்த விதம், நமது நாட்டிலுள்ள எளிய மக்களின் திறனையும், பன்முகத்தன்மையையும் உலகிற்கு உணர்த்தி இருக்கிறது.
இந்தியா தற்போது நவீனத்துவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கிராமங்களிலுள்ள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, உலக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தற்போது உலகின் நிலைத்தன்மைக்கு இந்தியாதான் காரணமாக இருக்கிறது. மேலும், உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக நாம் உருவாகி இருக்கிறோம். ஆகவே, இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.