இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பாரதப பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியாற்றினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரே பிரதமர் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால், காங்கிரஸ் கட்சியின் மனநிலையை நீங்களே கற்பனைச செய்து பார்க்கவும். இப்போது அவர்கள் எதிர்கட்சியில் மக்களிடத்தில் செல்வாக்கு இல்லாமல் “தண்ணீர் இல்லாத மீன் போல இருக்கிறார்கள்” .
பிரதமரின் செங்கோட்டை நிகழ்ச்சிக்கு வராமல் இருக்க, அவர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை. வீட்டில் கொடியேற்ற வேண்டும், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொடியேற்ற வேண்டும், அதனால் பிரதமர் நிகழ்ச்சிக்கு நேரமில்லை எனக் கூறுவதை, எப்படி ஏற்று கொள்வது. இதிலிருந்து மக்கள் காங்கிரஸ் கட்சியின் மனநிலையை புரிந்துக் கொள்வார்கள்” என தெரிவித்தார்.
அதேபோல, ‘அடுத்த ஆண்டு மோடி அவருடைய வீட்டில் கொடியேற்றுவார்’ என்று கார்கே கூறியது பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “பா.ஜ.க. 2014-ம் ஆண்டு ஆட்சி அமைக்கவே முடியாது என்று காங்கிரஸ் கூறியது. ஆனால், பெரும்பான்மைப் பலத்துடன் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைத்தோம். 2019-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைக்க சாத்தியக்கூறே இல்லை என்று காங்கிரஸ் கூறியது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம். பொதுமக்களே ஏழைக் குடும்பத்தின் மகன் மோடியை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர். ஆகவே, 2024 தேர்தலிலும் இந்த திமிர் கூட்டணியின் ஆணவத்தை மக்கள் முறியடிப்பார்கள்” என்றார்.