இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
அமெரிக்கவின் தலைநகா் வாஷிங்டன், சீனாவின் பெய்ஜிங், ஆஸ்திரேலியாவின் கான்பெரா ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினா் கலந்துகொண்டனா்.
அதேபோல் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினா் பங்கேற்றனா். சிங்கப்பூர் கடற்படையுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதற்காக சிங்கப்பூா் வந்திருந்த இந்தியாவின் ‘ஐஎன்எஸ் குலிஷ்’ போா்க்கப்பலை, இந்திய வம்சாவளியினா் பாா்வையிட்டனா்.
மேலும் இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய தூதா் கோபால் பாக்லே, இலங்கை உள்நாட்டு போரின்போது உயிரிழந்த இந்திய அமைதிப் படை வீரா்களின் நினைவு சின்னத்துக்கு மரியாதை செலுத்தினாா்.