உலகக் கோப்பை சதுரங்கத் தொடரின் காலிறுதியில் சக வீரர் அர்ஜுனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா. உலகக்கோப்பை சதுரங்கப் போட்டியில் விஸ்வநாத ஆனந்த்க்கு (2000, 2002) பிறகு, அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் பிரக்ஞானந்தா ஆவார்.
அஜா்பைஜான் நாட்டில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) சதுரங்கத்துக்கான உலக கோப்பை நடந்து வருகிறது. சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன், தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு ‘சடன் டெத்’ முறையில் போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் தொடங்கிய விளையாட்டில் பிரக்ஞானந்தா, 73வது நகர்வில் வெற்றி பெற்று, FIDE உலகக் கோப்பை சதுரங்கப் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினார். விஸ்வநாத ஆனந்த்திற்கு (2000, 2002) பிறகு இரண்டாவது இந்தியர் பிரக்ஞானந்தா ஆவார்.
மேலும், அரையிறுதி சுற்றில் பிரக்ஞானந்தா அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவுடன் மோத உள்ளார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சன், அஜர்பைஜான் வீரரான அப்சவ் நிஜாத்தை எதிர்கொண்டு விளையாட உள்ளார்.