அஸ்ஸாமில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட 61,000 இருமல் மருந்து பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திரிபுரா மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்களை லாரியில் கடத்தி வருவதாக அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்ட காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அஸ்ஸாம் – திரிபுரா மாநில எல்லையான சுரைபாரி பகுதியில் கரீம்கஞ்ச் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஏராளமான இருமல் மருந்து பாட்டில்கள் இருந்தன. அவற்றை சோதனை செய்தபோது, அவை அனைத்தும் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, லாரியில் இருந்த தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 61,000 பாட்டில் இருந்தன. இதன் சந்தை மதிப்பு 4 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேலும், லாரி ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி இதே கரீம்கஞ்ச் மாவட்டத்தில் கைவிட்டப்பட்ட லாரியிலிருந்து தடை செய்யப்பட்ட 31,000 இருமல் மருந்து பாட்டில்களை காவல்துறையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.