கடந்த கால ஆட்சியாளர்கள் பழங்குடியினச் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியோ, பழங்குடியின சமூக மக்களின் வளர்ச்சியில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறார் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பெருமையுடன் கூறியிருக்கிறார்.
திரிபுரா மாநிலத்தில் பல்வேறுப் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இச்சமூகங்களின் முக்கிய நிர்வாகிகளுக்கான ஆலோசனை பட்டறையின் தொடக்க அமர்வு அகர்தலாவில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேசுகையில், “பழங்குடியினர் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவர்கள். ஆகவே, அவர்களது வளர்ச்சிதான் மாநிலத்திற்கு முக்கியம்.
இதற்கு முந்தைய அரசுகள் பழங்குடியினச் சமூகத்தினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால், பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, பழங்குடியினச் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். பழங்குடியினச் சமூக மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி விடமுயற்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்டு வருகிறார்.
மேலும், பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திரிபுரா மாநில அமைச்சரவையின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். அதேபோல, மத்திய அமைச்சரவையிலும், பழங்குடியினச் சமூகத்தினரின் பிரதிநிதித்துவத்தை பிரதமர் உறுதி செய்திருக்கிறார். பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கேற்ப மாநிலத்தின் வசிக்கும் பழங்குடியினச் சமூக மக்களுக்குச் சேவையாற்றுவதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இந்த முயற்சியில் பழங்குடியினச் சமூகத்தினர் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அரசின் நலன் சார்ந்த கொள்கைகளையும், சாதனைகளையும் அடிமட்டத்தில் வசிக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் பல்வேறு பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைக் கௌரவித்த முதல்வர் மாணிக் சாஹா, “பழங்குடியினரின் பாரம்பரிய உடையானது நமது மாநிலத்தின் மகத்தான பெருமையை வெளிப்படுத்துகிறது. தலைப்பாகை மற்றும் பாரம்பரிய ஆடைகளை அணிவது இன்று அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது” என்று கூறினார்.