ஆந்திரா மாநிலத்தில் உள்ள பிரபல கோவிலுக்கு 100 கோடி ரூபாய்கான காசோலையை, பக்தர் ஒருவர் காணிக்கை வழங்கிய விவகாரம் சர்ச்சையில் முடிந்துள்ளது.
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் அருகில் உள்ள சிம்மாச்சலத்தில் அருள்மிகு அப்பண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய உடன், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இதனால், கோவில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது உண்டியல் திறக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்களைக் கொண்டு எண்ணப்படும். அவ்வாறு கிடைக்கும் தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம். இந்த நிலையில், திருக்கோவில் உண்டியலை திறந்து, பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்திய நகை மற்றும் பணத்தை எண்ண கோயில் நிர்வாகத்தினர் வழக்கம் போல் எண்ணிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, திருக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் 100 கோடி ரூபாய் காணிக்கையாக வழங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த தகவல், உயர் அதிகாரிகளுக்கு முறைப்படித் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 100 கோடி ரூபாய் காணிக்கை குறித்து அதிகாரிகள், வங்கி அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தினர். அப்போது, கோவிலுக்கு 100 கோடி ரூபாயை காணிக்கையாக கொடுத்தது போடேபள்ளியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பதும், ஆனால், அவரது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால், கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.