சந்திரயான்-3 வெற்றியானது பெண் சக்திக்கான உயிர்ப்பு என்று, மனதின் குரல் நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் மோடி பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றப் பிறகு, அக்டோபர் மாதம் 3-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் என்கிற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்குப் பிரதமர் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், 104 மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றுகையில், “எனதருமை குடும்பத்தினரே வணக்கம்! சந்திரயான்-3 வெற்றி எத்தனை பெரியது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஆகஸ்ட் 23-ம் தேதி பாரதமும், பாரதத்தின் சந்திரயானும், உறுதிப்பாட்டின் சில சூரியன்கள், நிலவிலும்கூட உதிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. சந்திரயான் மூலம் அனைத்து நிலைகளிலும் பாரதம் வெல்ல விரும்புகிறது என்பது புதிய பாரதத்தின் உணர்வின் அடையாளமாகி இருக்கிறது. நான் ஏற்கெனவே செங்கோட்டையிலேயே கூறியிருந்தேன், பெண்கள் வழிநடத்தும் வளர்ச்சியை தேசிய இயல்பு என்கிற வகையில் வலுவுடையதாக்க வேண்டும். பெண்கள் சக்தியின் வல்லமை இணையும்போது, சாத்தியமில்லாதவை கூட சாத்தியமாகும்.
அந்த வகையில், சந்திரயான்-3 பெண் சக்திக்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டு. பாரதத்தின் பெண்கள், விண்ணுக்கே சவால் விடுக்கின்றார்கள். இந்த மொத்த மிஷனிலும் பல பெண் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். எந்தவொரு நாட்டின் பெண்களும், இத்தனை தீவிர ஆர்வம் உடையோராக இருந்தால், அந்த தேசத்தின் வளர்ச்சியை யாரால் தடை செய்ய முடியும்? நாம் இத்தனை பெரிய பயணத்தை ஏன் மேற்கொள்ள முடிந்தது என்றால், நமது கனவு உரியது, நமது முயற்சியும் பெரியது.
செப்டம்பர் மாதம், பாரதத்தின் திறமைக்குச் சாட்சியாக இருக்கும். டெல்லியில் 9, 10-ம் தேதிகளில் நடக்கவிருக்கும் ஜி20 தலைவர்கள் மாநாட்டிற்காக பாரதம் முழுத்தயார் நிலையில் இருக்கிறது. இந்த ஏற்பாட்டில் பங்கெடுக்க 40 நாடுகளின் தலைவர்களும், பல உலக நிறுவனங்களும் தலைநகர் டெல்லிக்கு வருகிறார்கள். பாரதத்தின் அழைப்பின் பேரில், ஆப்பிரிக்கக் கூட்டமைப்பும் கூட ஜி20யோடு இணைந்திருக்கும் நிலையில், ஆப்பிரிக்க மக்களின் குரல், உலகின் இந்த முக்கியமான மேடை வரை எட்டியிருக்கிறது.
ஜி20-ன் நமது தலைமைத்துவம், மக்களின் தலைமைத்துவம். இதில் மக்களின் பங்களிப்பு உணர்வு மிக முதன்மையானது. ஜி20-ன் 11 ஈடுபாட்டுக் குழுக்களில் கல்வியாளர்கள், குடிமை சமூகத்தவர்கள், இளைஞர்கள், பெண்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில்முனைவோர் மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தோடு இணைந்தவர்கள் முக்கியமான பங்களிப்பை அளித்தார்கள். இதை முன்னிட்டு நாடெங்கிலும் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளோடு, ஏதோ ஒரு வகையில் 1.50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இணைந்திருக்கிறார்கள்.
மக்களின் பங்களிப்பு தொடர்பான நமது இந்த முயற்சியில் ஒன்றல்ல, 2 உலக சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. வாராணசியில் நடைபெற்ற ஜி20 வினாடிவினா போட்டியில் 800 பள்ளிகளிலிருந்து 1.25 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு உலகச் சாதனையாக்கி இருக்கிறார்கள். அதேபோல, லம்பானி கைவினைஞர்கள் 450 பேர் சுமார் 1,800 தனித்துவம் வாய்ந்த அலங்காரங்களின் ஆச்சரியமான தொகுப்பை உருவாக்கி, தங்களுடைய திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜி20-க்கு வந்த அனைத்துப் பிரதிநிதிகளும் நமது தேசத்தின் கலைத்துறையின் பன்முகத்தன்மையைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
இதே போன்றதொரு அற்புதமான நிகழ்ச்சி சூரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற புடவை உடுத்திய பெண்களின் நீண்டதூர நடைப்பயணத்தில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 15,000 பெண்கள் பங்கெடுத்தார்கள். இந்த நிகழ்ச்சி காரணமாக, சூரத்தின் ஜவுளித் தொழிலுக்கு ஊக்கம் கிடைத்திருக்கிறது. மேலும், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற கருத்திற்கும் வலு கிடைத்தது. அதோடு, உள்ளூர் பொருட்கள், உலக அளவுக்குக் கொண்டு செல்லப்படும் வழியும் ஏற்பட்டிருக்கிறது.
ஸ்ரீநகரில் ஜி20-ன் கூட்டத்திற்குப் பிறகு கஷ்மீரிலே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்வதெல்லாம், வாருங்கள் ஜி20 சம்மேளனத்தை வெற்றி பெறச் செய்வோம், தேசத்தின் பெருமையை நிலைநிறுத்துவோம். மனதின் குரல் பகுதிகளில் நாம் நமது இளைய தலைமுறையினரின் திறமைகளைப் பற்றி விவாதிக்க சந்தர்ப்பங்களை அமைத்துக் கொண்டு வருகிறோம் எனக் கூறினார்.