எகிப்து நாட்டில் நாளை நடைபெறும் பிரைட் ஸ்டார்- 23 பயிற்சிக்கு, இந்திய ராணுவ வீரர்கள் உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றனர். பிரைட் ஸ்டார் பயிற்சியில் இந்திய படைகள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
எகிப்தில் உள்ள முகமது நகுயிப் ராணுவத் தளத்தில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 14 வரை பிரைட் ஸ்டார் – 23 என்ற பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி, முப்படைகளின் கூட்டு இராணுவப் பயிற்சியாகும். இது அமெரிக்கா மற்றும் எகிப்திய இராணுவத்தால் வழிநடத்தப்படுகிறது.
கடந்த 1977 -ம் ஆண்டு கேம்ப் டேவிட் ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா – எகிப்து இடையே மட்டும் பயிற்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 1995 -ம் ஆண்டு முதல் இந்தப் பயிற்சியில், மற்ற நாடுகளும் பங்கேற்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு பிரைட் ஸ்டார்-23 பயிற்சி நடைபெறுகிறது. இதில், இந்தியா உள்ளிட்ட 34 நாடுகள் பங்கேற்கின்றன. 549 வீரர்களுடன் பிரைட் ஸ்டார் பயிற்சியில் இந்திய படைகள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் பயிற்சியில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, உலக அமைதியை நிலைநாட்டுவது, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களை மற்ற இராணுவங்களுடன் பகிர்ந்து கொள்வது என பல்வேறு பயிற்சிகள் மற்றும் நடைமுறைகள் செயல்படுத்தப்பட உள்ளன.