மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ‘ஜன் ஆசீர்வாத் யாத்திரை’யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இங்கு, கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், 114 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக கமல்நாத் பதவியேற்றார். ஆனாலும், 2020-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், கமல்நாத் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பா.ஜ.க.வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சௌஹான் முதல்வராகப் பதவியேற்றார்.
2023ஆம் ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேச மாநிலத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க. சார்பில் “ஜன் ஆசீர்வாத் யாத்ரா” (மக்கள் தரிசன யாத்திரை) என்கிற யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பா.ஜ.க. மாநிலத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தின் 5 இடங்களில் இருந்து 5 “ஜன் ஆசீர்வாத் யாத்திரைகள்” தொடங்குகின்றன. இதில், சட்னா சட்டமன்றத் தொகுதி சித்ரகூட்டில் இருந்து செப்டம்பர் மாதம் 3-ம் தேதி தொடங்கும் யாத்திரையையும், செப்டம்பர் 5-ம் தேதி மண்டலாவில் இருந்து தொடங்கும் யாத்திரையையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
செப்டம்பர் 4-ம் தேதி காண்ட்வா மற்றும் நீமுச் ஆகிய பகுதிகளில் இருந்து தொடங்கும் யாத்திரையைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார். செப்டம்பர் 6-ம் தேதி ஷியோபூரில் இருந்து தொடங்கும் 5-வது யாத்திரையை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தொடங்கி வைக்கிறார். மேற்கண்ட யாத்திரைகளில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் பங்கேற்பார். இந்த 5 யாத்திரைகளும் செப்டம்பர் 21-ம் தேதி போபாலை வந்தடைகின்றன.
இந்த 5 யாத்திரைகளுக்கும் 5 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மாநில ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் பூபேந்திர சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த யாத்திரை மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் 210 தொகுதிகளில் 10,500 கி.மீ.க்கு மேல் செல்லும். தொடர்ந்து, பா.ஜ.க. நிறுவனர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளான செப்டம்பர் 25-ம் தேதி போபாலில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்” என்று தெரிவித்தனர்.