கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழையால் அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 17 மாவட்டங்களில் 1.91 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் முதல், நாடு முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதில், அஸ்ஸாம், இமாச்சல், உத்தரகண்ட், ஜார்கண்ட், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடும் வெள்ளப் பெருக்குக் காரணமாக இமாச்சல், ஹரியானா ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இமாச்சல் பிரதேச மாநிலம் முழுவதுமே பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில், 17 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. 17 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறது. மழை வெளத்தில், லக்கிம்பூர் மாவட்டத்தில் 47,400 பேரும், தேமாஜி மாவட்டத்தில் 41,000 பேரும், கோலாகாட் மாவட்டத்தில் 28,000 பேரும், சிவசாகர் மாவட்டத்தில் 21,500 பேரும், சோனித்பூர் மாவட்டத்தில் 17,800 பேரும் என மொத்தம் 1.91 லட்சம் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். மழை வெள்ளத்துக்கு இதுவரை 15 பேர் பலியாகி இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதேசமயம், அஸ்ஸாமிலும், அண்டை மாநிலமான அருணாச்சல் பிரதேசத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, 42 வருவாய் கிராமங்களில் உள்ள 522 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாகவும், 1.30 லட்சம் வளர்ப்புப் பிராணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், 17 மாவட்டங்களில் 8086.40 ஹெக்டேர் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி விட்டதாகவும், 18 முக்கியச் சாலைகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டிருக்கிறது.