தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 2-ம் கட்ட பாதயாத்திரை, வரும் 4-ம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து தொடங்க உள்ளதாக, தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். முதற்கட்ட பயணம் நிறைவு பெற்ற நிலையில், 2-ம் கட்ட பாத யாத்திரை தொடங்க உள்ளது.
இது தொடர்பாக, தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கூறுகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனக்கு முதல் கட்ட பாத யாத்திரையில் கிடைத்த அனுபவங்களை வைத்து, 2-ம் கட்ட பாத யாத்திரையை வடிவமைத்துள்ளார்.
2-ம் கட்ட பாத யாத்திரையில், தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முக்கியத் தொழில் நடக்கும் பகுதிக்குச் செல்வார். அங்கு சாதனையாளர்களை சந்தித்துப் பேசுவார்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகளைக் கேட்டுத் தீர்வுக் காண முயற்சி செய்வார். தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுவார்.
மதியம் உணவு மற்றும் ஓய்வுக்குப் பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பொது மக்களுடன் நடை பயணம் மேற்கொள்வார்.
4 மணி நேரத்தில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஒரு தொகுதியில் பயணம் நிறைவு பெற்றாலும், அடுத்த தொகுதியின் எல்லையில் யாத்திரை தொடரும்.
பின்னர், அந்த பகுதியில் பொதுமக்கள் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுமார் அரை மணி நேரம் உள்ளூர் முதல் மாநில பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசுவார்.
முடிவில், உள்ளூர் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடிய பின்னர், அங்குள்ள விடுதியிலோ அல்லது அடுத்த தொகுதியில் உள்ள விடுதியிலோ தங்குவார்.
முதற்கட்ட பாத யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டது போலவே, 2-ம் கட்ட யாத யாத்திரையின் போதும், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்றார்.