இலங்கையில் முட்டையின் விலை ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்த, இந்தியா 9.20 கோடி முட்டைகளை ஏற்றுமதி செய்யவுள்ளதாக இலங்கை தெரிவித்திருக்கிறது.
இலங்கையில் அந்நிய செலாவணி நெருக்கடிக் காரணமாக, கால்நடைத் தீவனக் கொள்முதல் பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக அங்கு முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, கடந்த மார்ச் மாதம் 20 லட்சம் முட்டைகளை இந்தியா ஏற்றுமதி செய்தது. இந்த நிலையில், மக்களுக்கு மலிவு விலையில் முட்டை வழங்கவும், இந்தியாவிலிருந்து 9.20 கோடி முட்டைகளை இறக்குமதிச் செய்ய அனுமதிக்குமாறும், இலங்கையின் வர்த்தகக் கழகம், அரசிடம் கோரிக்கை வைத்தது.
இதுதொடர்பாக இலங்கை அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்த்தன் கூறுகையில், “தட்டுப்பாடு மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக, 9.20 கோடி முட்டைகளை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக இந்தியச் சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 3 நிறுவனங்களிடம் மொத்த மதிப்பீடு கேட்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 3 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.