அறிவியல், கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் இந்தியப் பெண்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரமளிக்க மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அந்த வகையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு பிரச்சனைக்கு பிரதமர் மோடி ஒரு தீர்க்கமான திருப்பத்தை கொடுத்திருக்கிறார் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.
கடந்த 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றையதினம் மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிருக்கு 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 19-ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடிய அவையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்தது. இம்மசோதா மீதான நேற்று நடைபெற்ற நிலையில், மக்களவையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று காலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.பி.நட்டா, “நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சனைக்கு, பிரதமர் நரேந்திர மோடி தீர்க்கமான திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் நான் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அறிவியல், ராணுவம், கல்வி மற்றும் பொருளாதாரம் என எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியப் பெண்கள் முன்னணிப் பாத்திரத்தில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது பெண்களின் இருப்பு மட்டுமல்ல, உலகில் அவர்கள் பெறும் மரியாதை. துறைகளில் அவர்களின் பங்களிப்பைப் பற்றி நமக்குச் சொல்கிறது.
ஆண்களை விட பெண்களின் உணர்திறன் அதிகமாக உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இதன் விளைவாக, பெண்களின் முடிவெடுக்கும் திறன் சிறப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது. பொது நபர்களாக, ஆண்களை விட பெண்கள் அணுகக்கூடியவர்கள். மேலும், ஊழல் அளவுகூட பெண் பிரதிநிதி இருக்கும்போது குறைவாக இருக்கும். இது பெண்களின் நூற்றாண்டு. பெயர்களைப் பற்றி மக்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், “நாரி சக்தி வந்தன் ஆதினியம்” என்பது நமது அரசாங்கம், நமது பிரதமர் மற்றும் சமூகத்தில் உள்ள பெண்கள் பற்றிய நமது கண்ணோட்டத்தின் அடையாளம். இது ஒரு திசையை அளிக்கிறது” என்றார்.