சாலை விபத்துகளில், தமிழகம் முதலிடத்தையும், உயிரிழப்பில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ள தகவல், மத்திய சாலை போக்குவரத்துத் துறை ஆய்வறிக்கையில் அம்பலமாகி உள்ளது.
தமிழகத்தில், 6 ஆயிரத்து 606 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, 63 ஆயிரத்து 956 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில், பல ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், சாலைகளில் நடக்கும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த ஆய்வறிக்கையை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் முதலிடத்தையும், உயிரிழப்பில் இரண்டாவது இடத்தையும் தமிழகம் பிடித்துள்ளது.
நாடு முழுதும், கடந்த 2022-ஆம் ஆண்டு 4 இலட்சத்து 61 ஆயிரம் விபத்துகள் நடந்துள்ளன. இதில், தமிழகத்தில், 64 ஆயிரத்து 105 விபத்துகள் நடந்துள்ளது. இந்த விபத்துகளில், நாடு முழுதும், 1 இலட்சத்து 68 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 17 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த, 2018 முதல் விபத்துகள் நடக்கும் மாநிலங்களில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலும், தமிழகத்தில் மற்ற மாநிலங்களைவிட அதிக விபத்துகள் பதிவாகியுள்ளது.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெரும்பாலான மாநில அரசுகள் மதுவிலக்கைக் கொண்டு வந்த போதிலும், தமிழகத்தை ஆளும் திமுக அரசு, தேர்தல் வாக்குறுதியில் மதுவிலக்கை அறிவித்தும் இன்னும் செயல்படுத்தவில்லை.
மது ஆலைகளை வைத்து நடத்தும் திமுக, தன்னுடைய சுயலாபத்திற்காக மக்களின் உயிரை காவு வாங்குவதாக பெரும்பாலானோர் குற்றம் சாட்டுகின்றனர்.