நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக, பணியாளர்கள் 8 பேரை மக்களவைச் செயலகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.
கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் 22-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த சூழலில், நேற்று முற்பகல் நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் அரங்கத்தில் இருந்த 2 பேர் திடீரென, மக்களவைக்குள் குதித்தனர்.
இருவரும் சர்வாதிகாரம் கூடாது என்று கத்தியபடியே, அவைத் தலைவரின் இருக்கையை நோக்கி ஓடினர். இருவரையும் மக்களவையில் இருந்த எம்.பி.க்கள் திரண்டு பிடித்தனர். அப்போது, இருவரும் கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசினர். இதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியது. இதனால், அவையில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து, பிடிபட்ட இருவரும் அவைப் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து, இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவைச் சோ்ந்த சாகா் சா்மா என்பதும், மற்றொருவர் கா்நாடகாவின் மைசூரைச் சோ்ந்த டி.மனோரஞ்சன் என்பதும் தெரியவந்தது.
அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று கோஷமிட்டவாறு மஞ்சள் நிற புகைக் குண்டுகளை வீசிய ஒரு பெண்ணையும், ஒரு ஆணையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அந்த ஆண் மகாராஷ்டிராவைச் சோ்ந்த அமோல் ஷிண்டே என்பதும், அப்பெண் ஹரியானாவைச் சோ்ந்த நீலம் தேவி என்பதும் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சூழலில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த இந்த அத்துமீறலுக்கு பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம் என்பதால், பணியாளர்கள் ராம்பால், அரவிந்த், வீர் தாஸ், கணேஷ், அனில், பிரதீப், விமித் மற்றும் நரேந்திரன் ஆகிய 8 பேரை மக்களவை செயலகம் இன்று சஸ்பெண்ட் செய்திருக்கிறது.