வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், வனத்துறை அதிகாரி கிஷன் சந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு சொந்தமான ரூபாய் 31 கோடி மதிப்பிலான, பள்ளி கட்டடம் மற்றும் கல் நொறுக்கும் ஆலை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
உத்தரகாண்டில் உள்ள இந்திய வனப்பணி அதிகாரி ஒருவருக்கு எதிரான பணமோசடி வழக்கில், அவருக்கு சொந்தமான ரூபாய் 31 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைப் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-இன் கீழ் வனத்துறை அதிகாரி கிஷன் சந்த் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையே ஹரித்வார் மற்றும் ரூர்க்கி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு பள்ளி கட்டடம் மற்றும் கல் நொறுக்கும் ஆலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் தவறான வழியில் வந்தது என்றும், மூன்றாம் நபர்களின் பெயரில் ஏராளமான பணம் மற்றும் காசோலைகள் பல்வேறு கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.
கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், குற்றம் சாட்டப்பட்ட கிஷன் சந்த், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவதற்கு மற்றும் பிற தேவைகளுக்கு 41.9 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்.
ஆனால், இந்தக் காலகட்டத்தில் கிஷன் சந்தின் வருமானம் ரூபாய் 9.8 கோடி ஆகும். இதனால், கிஷன் சந்த் ரூபாய் 32.1 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக தவறான வழிகளில் சொத்து சேர்த்துள்ளார் என்பது தெரியவந்தது.