இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் கடந்த 1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிமி அமைப்பு, மத மாற்றம் மூலம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டின் போபால் சிறை உடைப்பு சம்பவம், பெங்களூரு சின்ன ஸ்வாமி மைதான குண்டுவெடிப்பு, உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் சிமி அமைப்புக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிமி இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் சிமி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சிமி மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அதன் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.